தேர்தலுக்கு பிறகு ஆதரவு பெறுவது குறித்து பா.ஜனதா-காங்கிரஸ் கட்சியினர் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை; குமாரசாமி பரபரப்பு பேட்டி


தேர்தலுக்கு பிறகு ஆதரவு பெறுவது குறித்து பா.ஜனதா-காங்கிரஸ் கட்சியினர் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை; குமாரசாமி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

தேர்தலுக்கு பிறகு ஆதரவு பெறுவது குறித்து பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரகசிய கூட்டணி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். எங்களை தோற்கடிக்க பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ரகசிய கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இந்த 2 தேசிய கட்சிகளும் வெட்கப்பட வேண்டும். இனிமேல் ஆவது, ஜனதாதளம் (எஸ்) ரகசிய கூட்டணி வைத்து கொள்வதாக கூறும் குற்றச்சாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எங்கள் கட்சியை குறை சொல்வதே தேசிய கட்சிகளுக்கு வேலையாக போய்விட்டது. ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் பேசியதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். சித்தராமையா, பா.ஜனதாவுடன் ஜனதாதளம் (எஸ்) ரகசிய கூட்டணி வைத்து கொண்டிருப்பதாக சொல்கிறார். இந்த 2 கட்சி தலைவர்களுக்கும் இதைவிட்டால் வேறு விஷயம் இல்லையா?.

காங்கிரசுக்கு பயம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு சொந்த பலத்தில் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்து கொள்வோமோ என்று பா.ஜனதாவினருக்கும், பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து விடுவோமோ என்று காங்கிரசாருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தான் அவர்கள் எங்களை அடிக்கடி கிளறி பார்க்கிறார்கள். 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். இதை அந்த கட்சிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கருத்து கணிப்புகளை பார்த்தேன். அதை பார்த்து எனக்கு எந்த ஆதங்கமும் ஏற்படவில்லை. தேசிய கட்சிகள் தங்களின் அரசியலின் ஒரு பகுதியாக தங்களுக்கு தேவையான நிறுவனங்கள் மூலம் கருத்து கணிப்புகளை வெளியிட்டு கொள்கின்றன.

பழக்கம் இல்லை

தேர்தலுக்கு பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவை பெற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் எங்களை சந்தித்து பேசியுள்ளனர். எனக்கு பொய் பேசி பழக்கம் இல்லை. மந்திரி நாரயணகவுடாவை காங்கிரசில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் அப்பா-பிள்ளைகளின் பேச்சை ஏற்காதவர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து உலகின் 8-வது அதிசயம். சித்தராமையா எங்கள் கட்சியில் இருந்தபோது, நாங்கள் மேடை அமைப்போம். அவர் வந்து பேசிவிட்டு செல்வார். அவர் தனிக்கட்சி தொடங்கி 2 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?. சித்தராமையாவுக்கு மக்கள் மூலம் உரிய பாடத்தை புகட்டுவோம். தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக கூறி முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தடை போட கூடாது. ஏழை மக்களுக்கு உதவுகள் வழங்குவதை நிறுத்த வேண்டாம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story