பா.ஜனதா அரசு கர்நாடகத்தின் 'சாபக்கேடு'; சித்தராமையா கடும் தாக்கு


பா.ஜனதா அரசு கர்நாடகத்தின் சாபக்கேடு; சித்தராமையா கடும் தாக்கு
x

கர்நாடகத்திற்கு பா.ஜனதா அரசு ‘சாபக்கேடு’ என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

பெலகாவி:

ஊழலில் மூழ்கியுள்ளது

காங்கிரஸ் கட்சியின் பஸ் பயணம் நேற்று பெலகாவியில் தொடங்கியது. சிக்கோடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் இருக்கும் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதற்காக நாங்கள் இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், கர்நாடக பா.ஜனதா ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள், தவறுகளை மக்களிடம் எடுத்து கூறுவோம். ஒட்டுமொத்த பா.ஜனதா அரசும் ஊழலில் மூழ்கியுள்ளது.

கர்நாடகத்தின் 'சாபக்கேடு'

அதனால் இந்த அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் முறைகேடுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனால் இந்த அரசு, கர்நாடகத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. இந்த அரசை அகற்றியே தீருவோம். ஊழலின் தலைநகரமாக கர்நாடகத்தை பா.ஜனதா மாற்றிவிட்டது. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி நிர்வாகம் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி நிர்வாகத்தை வழங்குவோம் என்று நாங்கள் மக்களிடம் எடுத்து சொல்கிறோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

நேற்று தொடங்கியுள்ள காங்கிரசின் பஸ் யாத்திரை, வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பயணத்தை டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவரும் சேர்ந்து மேற்கொள்கிறார்கள். அதன்பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் அவர்கள் 2 பேரும் தனித்தனியாக பஸ் யாத்திரையை தொடங்க உள்ளனர். வட கர்நாடகத்தில் சித்தராமையாவும், தென் கர்நாடகத்தில் டி.கே.சிவக்குமாரும் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். மூன்று முக்கியமான கட்சிகளுமே பயணத்தை மேற்கொண்டு வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


Next Story