வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பா.ஜனதா; காங்கிரஸ் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜனதா ஏமாற்றியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பா.ஜனதா 600 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் மூலம் மக்களை பா.ஜனதா ஏமாற்றிவிட்டது. பா.ஜனதாவின் பொய் உறுதிமொழிகளின் ஆத்மாவுக்கு எப்போதும் அமைதி கிடைக்க கூடாது. மக்களை ஏமாற்றி குற்ற மனப்பான்மை பா.ஜனதாவுக்கு உள்ளது. கட்சி தொண்டர்கள் போராட்டத்தால் எடியூரப்பா, சி.டி.ரவி ஆகியோர் சிக்கமகளூருவில் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பியுள்ளனர். முதல்-மந்திரி பதவி என்பது ஆணவம், அகங்காரத்தை காட்டும் பதவி அல்ல. மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் உயர்ந்த பதவி. ஒரு பெண் உதவி கேட்டு முதல்-மந்திரியை அணுக முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்காமல் உதாசீனப்படுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் சாமானிய மக்களின் முதல்-மந்திரி அல்ல, குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாத முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை உள்ளார்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.