கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மைசூரு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தும் பா.ஜனதா
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மைசூரு மண்டலத்தில் பா.ஜனதா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பெங்களூரு:
தனி பெரும்பான்மை
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. கர்நாடகத்தை பொறுத்த வரையில் வட கர்நாடகம், மத்திய கர்நாடகத்தில் பா.ஜனதா அதிக பலத்துடன் திகழ்கிறது. அதே நேரத்தில் தென் மண்டலத்தில் அதாவது மைசூரு மண்டலத்தில் பா.ஜனதா அமைப்பு ரீதியாக பலவீனமாக உள்ளது. இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியால் இதுவரை தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
இந்த முறை நடைபெறும் தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனநிலையில் ஆளும் பா.ஜனதா பணியாற்றி வருகிறது. இதனால் அக்கட்சி மைசூரு மண்டலத்தில் அக்கட்சி தீவிர கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றுகிறது. ராமநகர், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, கோலார், துமகூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்கள் மைசூரு மண்டலத்தில் அமைந்துள்ளது.
ஆபரேஷன் தாமரை
அதில் 58 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் அவற்றில் ஜனதா தளம் (எஸ்) 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், பா.ஜனதா 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சாம்ராஜ்நகரில் உள்ள கொள்ளேகால் தொகுதி எம்.எல்.ஏ. என்.மகேஸ் ஏற்கனவே பா.ஜனதாவை ஆதரித்துள்ளார். ஒக்கலிகர்கள் அதிகம் உள்ள மண்டியா மாவட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 7-ல் 6 தொகுதிகளும், ராமநகரில் 4-ல் 3 தொகுதிகளிலும், ஹாசனில் 7-ல் 6 தொகுதிகளும், மைசூருவில் 11-ல் 4 தொகுதிகளும் ஜனதா தளம் (எஸ்) வசம் உள்ளன.
துமகூரு மாவட்டத்தில் குப்பி தொகுதி ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.சீனிவாஸ் அக்கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பா.ஜனதா இதுவரை 4 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு முறை கூட அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து அக்கட்சி 2 முறை ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதாவுக்கு ஆதரவு
தற்போது மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி, பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மண்டியா தொகுதி மக்கள் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளில் அடிப்படையில் முடுப்பவர்கள் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.