கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி
தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி குமாரசாமிக்கு, மந்திரி அஸ்வத் நாராயணா பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு:
இன்னும் 10 ஜென்மங்கள் எடுத்தாலும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருந்தார். இதுகுறித்து மந்திரி அஸ்வத் நாராயணிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறும் என்றும், குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றும் கூறி வருகிறார். மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று குமாரசாமி சபதம் ஏற்றுள்ளார். அவரது சபதம் நிறைவேறாது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி. மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். தேர்தல் முடிவுக்காக மே மாதம் வரை குமாரசாமி காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.