பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கியது
ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.6.10 கோடி சிக்கியது. இந்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
பெங்களூரு:
பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர் மாடால் விருபாக்ஷப்பா.
இவர், கர்நாடக மாநில சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரியத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த். இவர், கர்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.) அதிகாரி ஆவார். தற்போது பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது.
ரூ.40 லட்சம் லஞ்சம்
இந்த டெண்டரை எடுக்க பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இடையே போட்டி ஏற்பட்டு இருந்தது. அப்போது ஒரு ஒப்பந்ததாரரிடம் டெண்டர் வழங்குவதற்கு ரூ.81 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி பிரசாந்த் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அவ்வாறு ரூ.81 லட்சம் கொடுத்தால், அந்த டெண்டரை பெற்றுக் கொடுப்பதாகவும் பிரசாந்த் வாக்குறுதி அளித்தாக தெரிகிறது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பெங்களூரு கிரசென்ட் ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது அதிகாரி பிரசாந்தை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தார்கள். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
9½ மணிநேரம் சோதனை
இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.62 கோடி ரொக்கமும், சில ஆவணங்களும் சிக்கி இருந்தது. அதாவது ஒட்டு மொத்தமாக எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் இருந்து லஞ்ச பணத்துடன் சேர்த்து ரூ.2 கோடியே 2 லட்சம் சிக்கி இருந்தது. அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள்.
மேலும் கிரசென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்திலும், பெங்களூரு சஞ்சய்நகர் அருகே டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்திற்கு சொந்தமான வீட்டிலும் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். அலுவலகம் மற்றும் வீட்டில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக 9½ மணிநேரம் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ரூ.6.10 கோடி சிக்கியது
இந்த சோதனையில் பிரசாந்த் வீட்டில் மூளை, மூளையிலும் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தார்கள். வீட்டில் பல்வேறு பகுதிகளில் பணம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை 3 பைகளில் போலீசார் சேகரித்தனர். பின்னர் பணம் எண்ணும் எந்திரம் மூலமாக எண்ணப்பட்டது. அப்போது பிரசாந்த் வீட்டில் மட்டும் ரூ.6 கோடியே 10 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதே நேரத்தில் பிரசாந்தின் வீடு, எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் இருந்து டெண்டர் மற்றும் பிற முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
தந்தைக்கு பதிலாக மகன்...
இந்த நிலையில், ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரத்தில் நேற்று முன்தினமே மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த், உறவினர் சித்தேஷ், சுரேந்திரா, நிகோலஸ், கங்காதர் ஆகிய 5 பேரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி இருந்தனர். விசாரணையில், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்வதற்கான டெண்டர் வழங்குவதற்காக அதிகாரி பிரசாந்த் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றது உறுதியானது.
அதே நேரத்தில் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பிரசாந்த் பணியாற்றுவதால், டெண்டர் விவகாரத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், தன்னுடைய தந்தையான மாடால் விருபாக்ஷப்பாவுக்கு பதிலாக தான் ஒப்பந்ததாரரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றதையும் லோக் அயுக்தா போலீசார் உறுதி செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. மீது வழக்கு பாய்ந்தது
இதையடுத்து, ரூ.40 லட்சம் லஞ்சம், வீடு மற்றும் அலுவலகத்தில் சிக்கிய ரூ.7.72 கோடிக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், லோக் அயுக்தா போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முதல் குற்றவாளியாக மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2-வது குற்றவாளியாக பிரசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேர் மீதும் வழக்குப்பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பா கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் எம்.எல்.ஏ. எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உத்தரவின் பேரில் நேற்று காலையில் கர்நாடக மாநில சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மாடால் விருபாக்ஷப்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே மாடால் விருபாக்ஷப்பா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் முன்ஜாமீன் பெற அவர் முடிவு செய்து வக்கீல்களுடன் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் அடைப்பு
இதற்கிடையில், நேற்று முன்தினம் கைதான எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த் உள்பட 5 பேரும் நேற்று காலையில் லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்கள் 5 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.வின் வீட்டில் சிக்கிய ஆவணங்களை லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பிரசாந்தின் வங்கி கணக்குகள் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் பரிசீலித்து வருகின்றனர். அவரது வங்கி கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடத்திருப்பதையும் லோக் அயுக்தா போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாரபட்சம் இன்றி விசாரணை
எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.8 கோடியே 12 லட்சம் ஒட்டு மொத்தமாக சிக்கி இருப்பதகாவும், இந்த விவகாரம் குறித்து பாரபட்சம் இன்றி லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்திய வருவதாகவும், விசாரணைக்கு பின்பு பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதில் உள்ள தொடர்பு பற்றி தெரியவரும் என்றும் கர்நாடக மாநில லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறி வருகிறது. இந்த நிலையில், டெண்டருக்காக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதுடன், ரூ.7.72 கோடி சிக்கி இருப்பதால், சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றம்
கர்நாடகத்தில் டெண்டருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பா, அவரது மகன் பிரசாந்த் உள்பட 6 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயணபட் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ. பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு, லோக் அயுக்தா நீதிபதி மாற்றி உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. நியாயமான முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜெயந்த்குமார், லோக் அயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய ஆவணத்தை விழுங்கிய பிரசாந்த்
பெங்களூரு கிரசென்ட் ரோட்டில் உள்ள மாடால் விருபாக்ஷப்பா அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அதிகாரி பிரசாந்த் சிக்கி இருந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணத்தை எடுத்து பிரசாந்த் திடீரென்று வாயில் போட்டு விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோக் அயுக்தா போலீசார், பிரசாந்தின் வாயில் இருந்து அந்த ஆவணத்தை வெளியில் எடுத்தனர். அதனை ரசாயன மூலம் சுத்தம் செய்து அந்த ஆவணத்தை பாதுகாத்துள்ளனர். அதனை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக லோக் அயுக்தா போலீசார் சேர்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் கட்டுக்கட்டான பணம்
பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகம், அவரது மகன் பிரசாந்த வீட்டில் இருந்து லோக் அயுக்தா போலீசார் ஒட்டு மொத்தமாக ரூ.8 கோடியே 12 லட்சத்தை பறிமுதல் செய்திருந்தார்கள். மேலும் 1 கிலோ 600 கிராம் தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கின. இவற்றை போலீசார், 8 பைகளில் எடுத்து வைப்பது, பணத்தை கட்டுக்கட்டாக வரிசையாக அடுக்கி வைத்திருப்பது, வீடு, அலுவலகங்களில் இருந்து பணக்கட்டுகள் இருக்கும் பைகளை லோக் அயுக்தா ஊழியர்கள் தோளில் சுமந்தபடி வரும் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.
கே.ஏ.எஸ். அதிகாரியாக பிரசாந்த் ஆனது எப்படி?
பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் கடந்த 2008-ம் ஆண்டு கே.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அப்போது தன்னுடைய தந்தையின் வருமானம் ரூ.1.20 லட்சம் என்று கூறி இருந்ததுடன், 3பி என்ற இடஒதுக்கீடு மூலமாக பிரசாந்த் கே.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவர் தனது தந்தையின் வருமானத்தை குறைத்து கூறி அரசு அதிகாரியாக பணியில் சேர்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.