எஸ்.ஐ. தேர்வில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றாரா? செல்போன் உரையாடலால் பரபரப்பு


எஸ்.ஐ. தேர்வில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றாரா? செல்போன் உரையாடலால் பரபரப்பு
x

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. பசவராஜ் தடேசகுர் ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொப்பல்: எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. பசவராஜ் தடேசகுர் ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.தேர்வில் முறைகேடு நடத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.ஐ.டி. போலீசார் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்பட 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள பசவராஜ் தடேசகுர் செல்போனில் பேசிய உரையாடல் ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதில் பசவராஜ் தடேசகுர் எம்.எல்.ஏ.விடம் பரசப்பா என்பவர் தனது மகன் எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ரூ.15 லட்சம் கொடுத்துள்ளதாகவும், தற்போது எஸ்.ஐ.தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக இருப்பதால் கொடுத்த ரூ.15 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டு கொண்டார். இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ. பணத்தை திருப்பி தருவதாகவும், தற்போது பெங்களூருவில் இருப்பதால் கொப்பல் வந்தவுடன் தருவதாக கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

இந்த உரையாடலால் எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. எனினும், சி.ஐ.டி. விசாரணையை திசை திருப்பு நோக்கில் மர்மநபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே செல்போன் உரையாடலில் பதிவு செய்யப்பட்டுள்ள குரல் தன்னுடையது இல்லை எனவும், வேண்டுமென்றே சிலர் தன்னை சிக்கவைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பசவராஜ் தடேசகுர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


Next Story