மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கமா? அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு


மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கமா?  அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
x
தினத்தந்தி 5 Jun 2023 5:30 PM IST (Updated: 5 Jun 2023 5:44 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திக்கும் என அமித்ஷாவை சந்தித்த பிறகு ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு டெல்லி சென்றனர். அவர்கள் கூட்டாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

சந்திப்பு தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் :- டெல்லியில் நானும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். வேளாண்மை, கூட்டுறவு துறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கிடப்பில் உள்ள திட்டங்களை முடிப்பது தொடர்பாக பேசினோம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலத்தில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு வழிகாட்டியாக உள்ளனர்.

சந்திப்பின் போது இனிவரும் தேர்தல்களில் (நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி) சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மராட்டிய மேம்பாட்டுக்கான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த 11 மாதங்களில் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு முடிவுகளை எடுத்து உள்ளோம். வரும் காலங்களில் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். நாட்டில் மராட்டியத்தை முதல் மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி அமைந்தது. மாநிலத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. எனவே அதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் இந்த சந்தப்பில் பேசப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story