இரும்பு உருக்கு தொழிற்சாலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி பத்ராவதியில் முழுஅடைப்பு போராட்டம்
விசுவேஸ்வரய்யா இரும்பு உருக்கு தொழிற்சாலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி பத்ராவதியில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
சிவமொக்கா:
இரும்பு உருக்கு தொழிற்சாலை
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் கர்நாடக அரசுக்கு சொந்தமான விசுவேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறி அதனை அரசு மூடியது. இதனால் அங்கு வேலை பார்த்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். இதனால், இரும்பு உருக்கு ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
மாநில அரசும், அந்த தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகிறது. ஆனாலும் இன்னும் தொழிற்சாலை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், விசுவேஸ்வரய்யா இரும்பு உருக்கு தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பத்ராவதியில் 24-ந்தேதி (நேற்று) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
முழுஅடைப்பு
அதன்படி பத்ராவதியில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. தொழிலாளர்களுக்கு பா.ஜனதா அல்லாத அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த முழு அடைப்பையொட்டி பத்ராவதியில் வங்கி உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை.
தனியார் பஸ்கள், கார், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில், இரும்பு உருக்கு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், பத்ராவதி நகரில் ஊர்வலமாக வந்தனர். ஆலப்பா சர்க்கிளில் அவர்கள் டயர்களை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், விசுவேஸ்வரய்யா இரும்பு உருக்கு தொழிற்சாலையை மீண்டும் திறப்பதாக அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை தொழிற்சாலை திறக்கப்படவில்லை. இரும்பு உருக்கு ஆலையை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பத்ராவதி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பத்ராவதி நகரில் கடைகள் திறக்கப்பட்டன. வாகனங்கள் இயங்கின.