பெங்களூருவில் மேம்பால தடுப்பில் மோதி பி.எம்.டி.சி. சொகுசு பஸ் கவிழ்ந்தது

பெங்களூருவில் மேம்பால தடுப்பில் மோதி பி.எம்.டி.சி. சொகுசு பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
பெங்களூரு:-
பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டுக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (பி.எம்.டி.சி.) சொந்தமான வால்வோ சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ்சில் டிரைவர் மற்றும் 12 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் குட்டதஹள்ளி அரண்மனை ரோடு மேம்பாலத்தில் ஏற முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்த முயன்றார். அந்த சமயத்தில் பஸ் மேம்பால தடுப்பில் மோதி பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
முக்கிய சாலையான அரண்மனை ரோட்டில் பஸ் கவிழ்ந்ததால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே சதாசிவ நகர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.