கர்நாடகத்தில் 4 இடங்களில் தாய்ப்பால் வங்கி; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் 4 இடங்களில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆரோக்கிய உரிமை
கர்நாடகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சுகாதாரத்துறையில் கவனிக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கிய உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுகாதாரத்துறையில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. பிரசவத்தின்போது, தாய்-சேய் மரண விகிதம் 83-ல் இருந்து 69 ஆகவும், பாலின விகிதம் 978 ஆகவும், சிசுக்கள் மரணம் 21-ந் இருந்து 19 ஆகவும், பிறந்த குழந்தைகள் இறப்பது 16-ல் இருந்து 14 ஆகவும் குறைந்துள்ளது.
97 சதவீத பிரசவங்கள் ஆஸ்பத்திரிகளில் நடக்கின்றன. இது முக்கியமான விஷயம். இ-சஞ்சீவினி தொலைதூர மருத்துவ சிகிச்சையில்
கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. முதல்கட்டமாக 114 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 28 மகளிர் கிளினிக்குகள் மற்றும் நகர பகுதிகளில் மேலும் 128 நம்ம கிளினிக்குகளை தொடங்க இருக்கிறோம்.
மருத்துவ பரிசோதனை
வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்படும். இது மட்டுமின்றி மாநிலத்தில் மேலும் 4 இடங்களில் இந்த தாய்ப்பால் வங்கி அமைக்கப்படும். கர்நாடகத்தில் 1.70 கோடி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் இதுவரை 69 ஆயிரத்து 21 ஆயிரத்து 179 குழந்தைகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகள் உள்பட 167 மையங்களில் ரத்த சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் 56 சதவீத குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 6 மாவட்ட ஆஸ்பத்திரிகளில் அரசு-தனியார் பங்களிப்பில் எம்.ஆர்.ஐ. பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதர மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். காசநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள்
உலக தரத்தில் மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிர்வகிக்க டெண்டர் விட்டுள்ளோம். சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா அறக்கட்டளை மூலம் 42 லட்சம் பேரின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.5 ஆயிரத்து 426 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.