மூடிவிட்டு சென்றதால் பூட்டை உடைத்து சிலுமே நிறுவனத்தில் போலீசார் சோதனை


மூடிவிட்டு சென்றதால் பூட்டை உடைத்து   சிலுமே நிறுவனத்தில் போலீசார் சோதனை
x

வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக புகார் எழுந்துள்ளதால், சிலுமே நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் ஊழியர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மல்லேசுவரம்: வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக புகார் எழுந்துள்ளதால், சிலுமே நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் ஊழியர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக சிலுமே நிறுவனத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில், வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், சிலுமே நிறுவனத்தின் மீது உரிய விசாரணை நடத்தும்படி கூறி மாநகராட்சி இணை கமிஷனர் ரங்கப்பா, அல்சூர்கேட் மற்றும் காடுகோடி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தார்.

சிலுமே நிறுவனத்தில் சோதனை

அதன்பேரில், சிலுமே நிறுவனத்தின் இயக்குனர் லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது நேற்று முன்தினம் இரவு அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த நிலையில், நேற்று காடுகோடி போலீஸ் நிலையத்திலும் சிலுமே நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவானதும், மல்லேசுவரத்தில் உள்ள சிலுமே நிறுவனத்தை மூடவிட்டு நிர்வாகிகள் சென்று விட்டனர்.

இந்த நிலையில், நேற்று அல்சூர்கேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்கேஷ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த நிறுவனத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது போலீசாருக்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையில், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தில் பணியாற்றிய தர்மேஷ், ரக்சித், ராகவேந்திரா உள்பட 4 ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதே நேரத்தில் தலைமறைவான சிலுமே நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story