புட்டரங்கஷெட்டியின் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்


புட்டரங்கஷெட்டியின் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்
x

புட்டரங்கஷெட்டிக்கு மந்திரி பதவி நிராகரிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர், தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொள்ளேகால்:-

புட்டரங்கஷெட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி புட்டரங்கஷெட்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ. ஆகி உள்ள அவர், சித்தராமையா மற்றும் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் இடம்பிடித்து இருந்தார். இதனால் தற்போதும் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று புட்டரங்கஷெட்டி எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் மேலிடம் மந்திரி பதவி வழங்காமல் நிராகரித்துள்ளது. இதனால் புட்டரங்ஷெட்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி அவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவதாக கூறியது. ஆனால் அதனை புட்டரங்கஷெட்டி நிராகரித்துள்ளார்.

போராட்டம்

இந்த நிலையில் புட்டரங்கஷெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்களும், அவர் சார்ந்த உப்பாரா சமூகத்தினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், புட்டரங்கஷெட்டியின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் நல்லூர்மோலே கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 21). உப்பாரா சமூகத்தை சேர்ந்த இவர், புட்டரங்கஷெட்டியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்த நிலையில் புட்டரங்கஷெட்டிக்கு மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த அவர் தற்கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

தற்கொலை மிரட்டல்

அந்த கடிதத்தில், 'நான் காங்கிரசின் தீவிர தொண்டன். எங்கள் தலைவர் புட்டரங்கஷெட்டி. காங்கிரஸ் கட்சியும், மேலிடமும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. புட்டரங்கஷெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததால் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தற்கொலை செய்துகொள்வேன். எனது தற்கொலைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தான் காரணம்.

புட்டரங்கஷெட்டிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டாம். உப்பாரா சமூகத்தில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும்' என்று எழுதி உள்ளார். இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story