பீகாரில் அதிவிரைவு ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
டெல்லியில் இருந்து அசாம் சென்ற வடகிழக்கு அதிவிரைவு ரெயில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
பாட்னா,
டெல்லியின் ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் இருந்து அசாமின் காமாக்யா நகருக்கு வடகிழக்கு அதிவிரைவு ரெயில் (North East Express-12506) இயக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து நேற்று காலை 7.40 மணியளவில் புறப்பட்ட இந்த ரெயில், பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே இரவு 9.35 மணியளவில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 4 பயணிகள் பலியாகினர். சுமார் 80 பயணிகள் காயம் அடைந்தனர். ரெயில் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் ரெயில்வே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்றது. தற்போது மீட்பு பணிகள் முடிந்து மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார்.