பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளை அடுத்த மாதம் 19-ந் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்
பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளை அடுத்த மாதம் 19-ந் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 24 ஆயிரத்து 308 மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி இருப்பதாக கூறி, ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் ஒரு பொதுநல மனு விசாரணையின் பேது அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கும் மாணவ, மாணவிகளை கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, படிப்பை பாதியில் நிறுத்திய 18 ஆயிரத்து 584 பேரை பள்ளி கல்வித்துறை கண்டுபிடித்து, அவர்கள் படிப்பை தொடர பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் 5,724 குழந்தைளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதே நேரத்தில் பள்ளி படிப்பபை பாதியில் நிறுத்திய ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 5,724 மாணவ மாணவிகளை அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதிக்குள் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்த்து மீ்ண்டும் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவ, மாணவிகளை கண்டுபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.