சித்தராமையா தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம்; இலவச மின்சாரம் உள்பட 5 வாக்குறுதிகள் எப்போது அமல்?


சித்தராமையா தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம்; இலவச மின்சாரம் உள்பட 5 வாக்குறுதிகள் எப்போது அமல்?
x

இலவச மின்சாரம் உள்பட 5 வாக்குறுதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

பெங்களூரு:

மந்திரிசபை விஸ்தரிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ2,000, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 2 ஆண்டுகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு ரூ.1,500, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 5 வாக்குறுதிகளையும் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே அமல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி தலைவர்கள் உறுதியளித்தனர்.

இந்த இலவச திட்டங்களை அமல்படுத்துவது கடினம் என்று பா.ஜனதா கட்சி கூறியது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு படி மேலே போய், இந்த 5 திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி ஒரு உத்தரவாத அட்டையை அச்சிட்டு வீடு வீடாக வினியோகம் செய்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். 27-ந் தேதி மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. மந்திரிசபையில் உள்ள மொத்த இடங்களும் நிரப்பப்பட்டன.

இன்று மந்திரிசபை கூட்டம்

சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நாளிலேயே மந்திரிசபை கூட்டம் நடத்தப்பட்டு, 5 வாக்குறுதி திட்டங்களுக்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அவைகள் எப்போது அமல்படுத்தப்படும் என்று கூறவில்லை. முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே நிறைவேற்றுவதாக கூறிவிட்டு மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதிகள் விஷயத்தில் 1-ந் தேதி (நேற்று) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் குறித்து கர்நாடக அரசு கூறியது.

ஆனால் நேற்று நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் 2-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, அன்றைய தினம், 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அதன்படி முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் 5 வாக்குறுதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று நடைபெறும் மந்திரிசபை கூட்ட முடிவுகளை அறிய கர்நாடக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.


Next Story