கணவரின் கள்ளத்தொடர்பை மனைவி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; தம்பதிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய விவாகரத்து ரத்து - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
கணவரின் கள்ளத்தொடர்பை மனைவி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி, தம்பதிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய விவாகரத்தை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
மைத்துனியுடன் கள்ளத்தொடர்பு
பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது சொந்த ஊர் மணிப்பால் ஆகும். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு அந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்கு பின்பு அவர்கள் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். இதற்கிடையில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதாவது என்னுடைய குடும்பத்தினரை வீட்டில் தங்க விடுவதில்லை, சரியாக சமைப்பதில்லை, எனது பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார். மைத்துனியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி சண்டை போடுகிறார், இதுபோன்ற காரணங்களால் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கணவர் கூறி இருந்தார்.
தம்பதிக்கு விவாகரத்து
அதன்படி, குடும்ப நல கோர்ட்டு விசாரணை நடத்தி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருந்தது. தனது தங்கையுடன் உள்ள கள்ளத்தொடர்பை சாட்சி ஆதாரங்களுடன் நிரூபிக்க மனைவி தவறி விட்டதால், விவாகரத்து வழங்கப்படுவதாக குடும்ப நல கோர்ட்டு அறிவித்திருந்தது. தன் மீது கணவர் கூறிய குற்றச்சாட்டுகளின் பேரில் விவாகரத்து வழங்கி இருப்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனைவி சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அலோக் ஆராதே, விஜய்குமார் ஆகிய 2 பேர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை
அப்போது மனைவி மீது கணவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கணவர் தான் நிரூபித்து இருக்க வேண்டும். தனது தங்கையுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை மனைவி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபற்றி குடும்ப நல கோர்ட்டு பரிசீலனை செய்யாமல் விவாகரத்து வழங்கி இருப்பது தவறானது.
எனவே குடும்ப நல கோர்ட்டு வழங்கிய விவாகரத்து ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளனர்.