ஜனாதிபதி வேட்பாளர் அரசியல் சாசனத்தில் உறுதியாக இருக்க வேண்டும்: ராஷ்திரிய ஜனதா தளம் எம்.பி.


ஜனாதிபதி வேட்பாளர் அரசியல் சாசனத்தில் உறுதியாக இருக்க வேண்டும்: ராஷ்திரிய ஜனதா தளம் எம்.பி.
x

ஜனாதிபதி வேட்பாளருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தெளிவான புரிதலும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில், இந்திய அரசியலமைப்பு கிளப்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தவிர, சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஎம்எல், ஆர்எஸ்பி, தேசிய மாநாடு கட்சி, பிடிபி, ஜேடி(எஸ்), ஆர்.எல்.டி, ஐ.யு.எம்.எல் மற்றும் ஜே.எம்.எம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன.

இது குறித்து இன்று பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்.பி. மனோஜ் குமார் ஜா கூறுகையில், "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அரசியல் சாசனத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தெளிவான புரிதலும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். அவர் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் நடத்திய இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கவில்லை. அதேபோல, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) பங்கேற்கவில்லை. பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள, ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.


Next Story