ஆட்டோ மீது கார் மோதல்; 9 பேர் படுகாயம்
கவுரிபிதனூரில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை அடித்து நொறுக்கினர்.
கோலார் தங்கவயல்:
9 பேர் படுகாயம்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வசிப்பவர் சந்திரப்பா. இவரது வீட்டில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள சந்திரப்பாவின் உறவினர்கள் ஆந்திர மாநிலம் இந்துப்பூரில் இருந்து வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை சொந்த ஊருக்கு செல்ல தொட்டபள்ளாப்புராவுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின் பக்கமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. அதில், சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்ேடாவில் பயணித்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
காரை அடித்து நொறுக்கினர்
அப்போது ரூ.3½ ஆயிரம் வாடகை கொடுக்கும்படி ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டதாக தெரிகிறது. அதனால், வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் காயம் அடைந்தவர்களை அவரவர் வாகனங்களில் கவுரிபிதனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து கற்கலால் காரை அடித்து நொறுக்கினா். இதைப்பார்த்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கவுரிபிதனூர் புறநகர் போலீசார் விரைந்து வந்து கார் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.