நிவாரண தொகை வழங்காததால் அரசு அதிகாரியின் கார் ஜப்தி; கோர்ட்டு ஊழியர்கள் அதிரடி
பெண்ணிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியதற்கு நிவாரண தொகை வழங்காததால் அரசு அதிகாரியின் காரை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
உப்பள்ளி;
கோர்ட்டு உத்தரவு
தார்வார் மாவட்டம் நவலகுந்து பகுதியைச் சேர்ந்தவர் நாகவ்வா லலிதாகேரி. இவருக்கு சொந்தமான நிலத்தை தொழிற்பேட்டை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தியது. அதாவது நாகவ்வாவிடம் இருந்து 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.
இதற்காக நாகவ்வாவுக்கு அரசு சார்பில் ரூ.35 ஆயிரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட தொகை போதுமானது இல்லை என்றும், தனக்கு அதிகப்படியான தொகை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் நாகவ்வா, தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதில் அரசு சார்பில் நாகவ்வாவுக்கு ரூ.1.73 கோடி நிவாரண தொகை கொடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தொகையை தார்வார் மாவட்ட வருவாய்த்துறை அரசிடம் இருந்து பெற்று வழங்கிட வேண்டும் என்றும் கோர்ட்டு கூறியது.
அரசு கார் ஜப்தி
ஆனால் 9 மாதங்கள் ஆகியும் அரசு அந்த நிவாரண தொகையை நாகவ்வாவுக்கு கொடுக்கவில்லை. இதனால் அவர் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றி தரக்கோரி தார்வார் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு விரைவு கோர்ட்டில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரி பயன்படுத்தும் அரசு காரை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலையில் தார்வார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்துக்கு சென்று, வருவாய்த்துறை அதிகாரி அசோக்கின் காரை ஜப்தி செய்தனர். பின்னர் அந்த காரை கோர்ட்டு வளாகத்துக்கு ஓட்டி வந்து நிறுத்தினர். இந்த சம்பவம் நேற்று தார்வார் மாவட்ட வருவாய் துறை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.