கார்-ஜீப் நேருக்கு நேர் மோதல்;4 பேர் பலி
கடபா அருகே கார்-ஜீப் நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மங்களூரு:
கார்-ஜீப் மோதல்
ஹாசன் மாவட்டம் பேளூர் பகுதியை சேர்ந்த 6 காரில் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றனர். கார் நெட்டனே அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து கார் மற்றும் ஜீப்பில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு புத்தூர் மற்றும் மங்களூரு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கடபா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடபா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
விசாரணையில் விபத்தில் குழந்தை, பெண், 2 ஆண்கள் பலியானது தெரியவந்தது. 2 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. ஆனால் அவர்களின், பெயர், விவரங்கள் என்ன? என்பது குறித்து போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடபா அருகே விபத்தில் 4 பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.