கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் சாவு


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் சாவு
x

சிகாரிப்புரா அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவமொக்கா:-

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

சிவமொக்கா மாவட்டம் சிராளகொப்பா அருகே உலகினகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். இவரது தாய் கங்கம்மா(வயது 50). மல்லிகார்ஜூனின் மனைவி ஜோதி(30). இந்த தம்பதிக்கு 4 வயதில் சவுஜன்யா என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மல்லிகார்ஜூன், தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மல்லிகார்ஜூன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் குழந்தை சவுஜன்யாவுடன் அவரது தாய் கங்கம்மா, மனைவி ஜோதி ஆகியோர் அமர்ந்து உள்ளனர். மஞ்சினகொப்பா சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வேகமாக வந்த காரும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.

குழந்தை உள்பட 3 பேர் சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை சவுஜன்யா, தாய் ஜோதி மற்றும் கங்கம்மா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மல்லிகார்ஜுன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சிராளகொப்பா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story