ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு


ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
x

பாதயாத்திரையின் போது கே.ஜி.எப்-2 படத்தின் இசையை பயன்படுத்தியதாக ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு-

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா, கர்நாடகம், ஆந்திராவை கடந்து தற்போது தெலுங்கானாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் நவீன்குமார் என்பவர் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடர்பான 2 வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார்.

அதில் கே.ஜி.எப்.-2 படத்தின் இசை பயன்படுத்தப்பட்டு உள்ளது. அந்த இசை எனக்கு சொந்தமான ஒலிப்பதிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. எனது அனுமதி பெறாமல் பாதயாத்திரைக்கு இசையை பயன்படுத்தி உள்ளனர். எனது இசையை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவர் சுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த புகாரின்பேரில் தகவல் பதிப்புரிமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீதும் யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story