பசு மாடுகளுக்கு தோல் நோய் பாதிப்பு: கர்நாடகத்தில் கால்நடை சந்தைகளுக்கு தடை


பசு மாடுகளுக்கு தோல் நோய் பாதிப்பு:  கர்நாடகத்தில் கால்நடை சந்தைகளுக்கு தடை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கால்நடை சந்தைகளுக்கு தடை என்று மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கால்நடைகளுக்கு தோல் நோய் பரவி வருகிறது. அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த பகுதிகளில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் நோய் பாதித்த பகுதிகளில் கால்நடை சந்தைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் இருந்து கால்நடைகளை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதித்துள்ளோம். உடல் சுகாதாரத்துடன் உள்ள பசு மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படும். மேலும் அந்த மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நோய் பாதித்த பகுதிகளை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தோல் நோய் குறித்தும், அவற்றை தடுப்பது குறித்தும் விவசாயிகள் இடையே கால்நடை டாக்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கால்நடைகள் உணவு உட்கொள்ளாமை, பால் சுரப்பது குறைவது, உடலில் புண் ஏற்படுவது போன்றவை தோல் நோயின் அறிகுறி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story