டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 May 2023 4:15 AM IST (Updated: 18 May 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருப்பதால், முதல்-மந்திரி பதவி கேட்டு டி.கே.சிவக்குமார் அடம்பிடித்து வருகிறார். ஆனால் டி.கே.சிவக்குமார் மீது இருக்கும் வழக்குகளே, அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதற்கு தடையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏனெனில் டி.கே.சிவக்குமார் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை காரணமாக, அவர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது டி.கே.சிவக்குமார் ஜாமீனில் இருந்து வருகிறார்.

தற்போது அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால், அவர் மீது இருக்கும் வழக்குகளில் மீண்டும் கைதானால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முதல் 2 ஆண்டுகள் நான் முதல்-மந்திரியாக இருப்பதாக காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் சித்தராமையா கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவாகி உள்ள வழக்கு விசாரணையை தொடருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும், இதற்காக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. டி.கே.சிவக்குமார் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்கி ஆஜராகி வாதிட்டர். அப்போது ஐகோர்ட்டு வருகிற 23-ந் தேதி வரை தான் தடை விதித்துள்ளது. வருகிற 23-ந் தேதி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இடைக்கால தடை கோரி சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருப்பது தேவையற்றது என்று வாதிட்டார்.

இதையடுத்து, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை ஜூலை மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை எதிர்த்து, அங்கேயே மேல் முறையீடு செய்யும்படி சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் டி.கே.சிவக்குமார் நிம்மதி அடைந்துள்ளார்.


Next Story