வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு தடை நீட்டிப்பு


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு தடை நீட்டிப்பு
x

டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் வாதிட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகளும் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற 24-ந்தேதி வரை டி.கே.சிவக்குமார் மீது பதிவான வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story