17 ஆண்டுகளுக்கு முன்பு தடையை மீறி ஏற்றுமதி ரூ.250 கோடி பருப்பு ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், பருப்பு விலை உயர்ந்து வந்தது.
புதுடெல்லி,
கடந்த 2006-2007 ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், பருப்பு விலை உயர்ந்து வந்தது. அதன் விலையை கட்டுப்படுத்த, பருப்பு ஏற்றுமதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி, ஜெட் கிங் என்ற நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, போலி ஆவணங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு 60 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்தது. இதன்மூலம் ரூ.250 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் மீதும், அதன் உரிமையாளர் ஷியாம் சுந்தர் ஜெயின், நரேஷ்குமார் ஜெயின், பிரசாந்த் சேத்தி ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
ஊழல் தொடர்பான விவரங்களை கேட்டு 3 வெளிநாடுகளுக்கு கோர்ட்டு மூலம் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வழக்கு தாமதம் அடைந்தது. நியூசிலாந்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.
இந்நிலையில், 17 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. டெல்லி தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.