ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது.
ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், கடந்த ஆண்டு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் கமிஷனர் அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களையும், மின்னனு சாதனங்கள் மற்றும் வங்கி பரிமாற்றங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அந்த பணி முடிந்ததும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளிநாடு செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிஐ.
முன்னதாக, டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"வருகிற 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல், எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான மோதலாகத்தான் இருக்கும். கெஜ்ரிவாலின் வளர்ச்சியை தடுக்கும்விதமாகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சி.பி.ஐ அல்லது அமலாக்கத்துறை இயக்ககமோ என்னை கைது செய்யலாம். ஆனால் அதற்காக அஞ்ச மாட்டோம். நாங்கள் பகத்சிங்கை பின்பற்றுபவர்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.