வீட்டு மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த தம்பி...! மார்போடு தாங்கி காப்பாற்றிய அண்ணன்!
வீட்டு மாடியில் இருந்து தவறி தலைகீழாக விழுந்த தம்பியை மார்போடு தாங்கி காப்பாற்றிய அண்ணன்!
மலப்புரம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகே உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் 2 பேரும் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வீட்டின் மொட்டைமாடியில் தம்பி ஷபீக் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அண்ணன் சாதிக் வீட்டின் முன்பு நின்றபடி சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மை பணி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஷபீக் திடீரென்று கால்தவறி கீழே விழுந்தார். தலைகீழாக கீழே வந்து கொண்டிருந்தார். இதனை கீழே நின்று பார்த்த அண்ணன் சாதிக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் தனது கையில் வைத்திருந்த தண்ணீர் டியூப்பை தூர வீசிவிட்டு கிரிக்கெட் பந்தை பிடிப்பது போல் ஷபீக்கை மார்போடு சேர்த்து அணைத்து பிடித்தார்.
இதனால் ஷபீக் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மேலும் அவரது அண்ணன் சாதிக்கிற்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரும் எழுந்து அங்கிருந்து வீட்டுக்குள் செல்கின்றனர். இந்த சம்பவம் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.