சி.டி.ரவி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
சி.டி.ரவி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சித்ரதுர்கா:-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ., சித்தராமையா முதல்-மந்திரி ஆனால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள் என்று பேசியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை. அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கருத்துகளை பா.ஜனதாவினர் கூறுகிறார்கள்.
இந்த அரசின் ஊழல்கள், வாக்காளர் பட்டியல் முறைகேடு போன்ற விவகாரங்களை மூடிமறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பேசுகிறார்கள். கிராமப்புறங்களில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். சி.டி.ரவிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இருப்பதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அவர்களது கட்சியில் பிரச்சினைகள் உள்ளன. அதை முதலில் அவர்கள் தீர்த்து கொள்ளட்டும். அதன் பிறகு காங்கிரஸ் குறித்து அவர்கள் பேச வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.