பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை?


பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை?
x
தினத்தந்தி 27 Nov 2022 2:44 AM IST (Updated: 27 Nov 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு-

செல்போனுக்கு தடை

செல்போன் பயன்பாடு என்பது தற்போது விதிமுறைகளை மீறி சென்று வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கூட விலை உயர்ந்த செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு மாணவர்கள் கூட செல்போனை எடுத்து வரும் சூழல் தற்போது இருக்கிறது.

மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால், அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக நிபுணர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் பாதிப்பு

மாணவர்களின் சுமையை குறைக்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சனிக்கிழமைகளில் புத்தக பை இன்றி பள்ளிக்கு வர வேண்டும் என்று திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதுபோல், மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது கொரோனா சந்தர்ப்பத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும், செல்போன் பயன்படுத்துவதை மாணவர்கள் குறைத்து கொள்ளவில்லை. செல்போன் பயன்பாட்டால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், இதற்கு கடிவாளம் போடும் விதமாக பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுடன், ஆசிரியர்களும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story