ரூ.52 கோடி நிலுவை தொகை வழங்க சயனைடு மண்ணை டெண்டர் விடுவதற்கு மத்திய அரசு திட்டம்


ரூ.52 கோடி நிலுவை தொகை வழங்க சயனைடு மண்ணை டெண்டர் விடுவதற்கு மத்திய அரசு திட்டம்
x

கோலார் தங்கவயலில் உள்ள சனைடு மலையை டெண்டர் விட்டு, சுரங்க தொழிலாளிகளுக்கு ரூ.52 கோடி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.52 கோடி நிலுவை தொகை

கோலாரில் தங்கவயலில் செயல்பட்ட பிரசித்தி பெற்ற தங்கச்சுரங்கம் கடந்த 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி மூடப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றி 3,800 தொழிலாளிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கான நிலுவை தொகை இன்றுவரை வழங்கவில்லை. ரூ.52 கோடி வரை நிலுவை தொகை வழங்கவேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தங்கச்சுரங்கத்தையொட்டி உள்ள சயனைடு மலை மண்ணை டெண்டர் விடுவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. அதாவது இந்த சனைடு மண்ணை டெண்டர் விட்டால் ரூ.1,367 கோடி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களும் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை வைத்து தங்கச்சுரங்க தொழிலாளிகளுக்கு நிலுவை தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது சாத்தியமாகுமா என்பது தொழிலாளிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தொழிலாளிகள் கருத்து கூறியுள்ளனர்.

வரவேற்க தக்கது

இதுகுறித்து சுரங்கத் தொழிலாளி குணசேகரன் என்பவர் கூறுகையில், தங்கச்சுரங்க தொழிலாளிகள் கட்டாய ஓய்வு அளித்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை நிலுவை தொகையை வழங்கவில்லை. இதுவரை எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை. இந்த நிலுவை தொகையை வழங்க ஏன் இன்னும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. சயனைடு மண்ணை டெண்டர் விட்டு நிலுவை தொகை வழங்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது வரவேற்க தக்கது. ஆனால் அந்த பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும் என்றார்.

இதுகுறித்து கோலார் தங்கவயல் என்.பிளாக்கை சேர்ந்த தங்கச்சுரங்க தொழிலாளி பலராவம் கூறுகையில், தங்கச்சுரங்க தொழிலாளிகளுக்கு நிலுவை தொகை வழங்க இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் முன்வரவில்லை. வாக்கு சேகரிப்பதற்கு வருகின்றனர். வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. முன்னாள் தங்கச்சுரங்க இயக்குனர் சென்னமாலிகாலி பணியில் இருந்தபோது, தொழிலாளிகளுக்கு நிலுவை தொகை வழங்க முன்வரவில்லை. தற்போது அவரே கோர்ட்டில் தொழிலாளிகளாக வாதாடுவது வேடிக்கையாக உள்ளது. இதை ஐகோர்ட்டு நீதிபதி நாகரத்தனம்மா குறிப்பிட்டு கேள்வி எழுப்பிவிட்டார். இதை நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது என்றார்.

குஜராத் போன்று வழங்கவேண்டும்

மாரிக்குப்பத்தை சேர்ந்த சுந்தரேசன் கூறுகையில், நிலுவைத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக கூறுகின்றனர். இது வரவேற்க தக்கது. ஆனால் தொழில் சங்க நிர்வாகிகள், ஒருவர் பின் ஒருவர் வழக்கு தொடுப்பதால், இது எந்த நிலைவரை செல்லும் என்பது தெரியவில்லை. சயனைடு மண்ணை டெண்டர் விட்டால் ஆயிரம் கோடிக்கும் மேல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுகிடைத்தால் ரூ.52 கோடி நிலுவை தொகையை எளிதாக வழங்கிவிடலாம். இதற்கு தொழில் சங்க நிர்வாகிகள் தடையாக இருக்க கூடாது. மத்திய அரசை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

கிருஷ்ணகிரி லைனை சேர்ந்த எஸ்.பாஸ்கரன் என்பவர் கூறுகையில், கோலார் தங்கச் தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை போல், குஜராத் மாநிலத்தில் தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டியிருந்தது. ஆனால் அந்த மாநில அரசு தொழிலாளிகளுக்கு தலா ரூ.25 லட்சம் நிலுவை தொகை வழங்கியது. ஆனால் கோலாா தங்கச் சுரங்க தொழிலாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1½ லட்சம் மட்டும் வழங்கி கை கழுவி விட்டது. குஜராத்தில் வழங்கப்பட்டதுபோன்று கோலார் தங்கச் சுரங்க தொழிலாளிகளுக்கும் வழங்கவேண்டும் என்றார்.


Next Story