இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக துருவநாராயணா குற்றச்சாட்டியுள்ளார்.
மைசூரு:-
மைசூருவில் நேற்று அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் கலந்துகொண்டு, அம்பேத்கர் உருவ சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பரிசீலனை செய்தார். ஆனால் அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முடிவை கைவிட்டார். தற்போது அதேமாதிரி மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் நாட்டில் மோசமான நிலை ஏற்படும். மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டும் அடிமைத்தனத்துக்கு சென்றுவிடுவார்கள். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், எஸ்.சி., எஸ்.டி. குழந்தைகளுக்கு வழங்கிய கல்வி உதவி தொகையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நாட்டில் பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மத கலவரம், சாதி கலவரம் அதிகரித்து உள்ளது. மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.