இணை செயலாளர், இயக்குனர்களாக அரசு துறைகளில் தனியார் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கைமத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசின் 12 துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தனியார் துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
புதுடெல்லி, மே.19-
மத்திய அரசின் 12 துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தனியார் துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான துணை மற்றும் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் போன்ற அதிகாரிகள் பொதுவாக அகில இந்திய அளவில் குரூப் ஏ சர்வீஸ் உள்ளிட்ட வழிகள் மூலம் நியமிக்கப்படுவார்கள்.
ஆனால் தற்போதைய மத்திய அரசு தனியார் துறைகளில் நிபுணர்களாக இருப்போரை நேரடியாக மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு நியமித்து வருகிறது.
அந்தவகையில் மத்திய அரசின் 12 துறைகளுக்கு மேற்படி இணை மற்றும் துணை செயலாளர்கள், இயக்குனர்கள் 20 பேரை தனியார் துறையில் இருந்து நியமிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள வோளண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேதிப்பொருள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை உள்பட 12 துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இதில் 16 பேர் துணை செயலாளர் மற்றும் இயக்குனர்களாகவும், 4 பேர் இணை செயலாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பான விரிவான அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 20-ந்தேதி (நாளை) வெளியிடப்படும். அன்று முதல் ஜூன் 19-ந்தேதி வரை இந்த பணிக்காக விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு மத்திய அரசு துறைகளுக்கு தனியார் துறையில் இருந்து அதிகாரிகள் நியமிப்பது இது 3-வது முறையாகும்.
ஏற்கனவே 10 இணை செயலாளர் மட்டத்திலான பதவிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு, முதல் முறையாக தனியார் துறையில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு 31 அதிகாரிகள் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளையும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டது.