கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் ரத்து- உயர்கல்வித்துறை இன்று முக்கிய முடிவு
தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வின்(சி.இ.டி.) மதிப்பெண் பட்டியலை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதனால் 21 ஆயிரம் மாணவ-மாணவிகளின் நிலை என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை இன்று (திங்கட்கிழமை) முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது.
பெங்களூரு: தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வின்(சி.இ.டி.) மதிப்பெண் பட்டியலை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதனால் 21 ஆயிரம் மாணவ-மாணவிகளின் நிலை என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை இன்று (திங்கட்கிழமை) முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது.
பொது நுழைவு தேர்வு முடிவுகள்
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொது நுழைவு தேர்வுக்கான முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. இதில் நடப்பாண்டு பி.யூ.சி. 2-வது ஆண்டு தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களும், பொது நுழைவு தேர்வில் எடுத்த மதிப்பெண்களும் சேர்த்து கணக்கிட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பொது நுழைவு தேர்வை எழுதி இருந்த மாணவ, மாணவிகளுக்கு பி.யூ.சி. தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் சேர்க்கப்படாமல் இருந்தது. இதன்காரணமாக தொழில் படிப்புக்கான மதிப்பெண் பட்டியலில், 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் குறைவான மதிப்பெண்களை எடுத்திருந்தார்கள். இந்த 21 ஆயிரம் மாணவ, மாணவிகளும் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பி.யூ.சி. தேர்வு எழுதாமல் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
மதிப்பெண் பட்டியல் ரத்து
அவர்கள் அனைவரும் பி.யூ.சி. முதலாம் ஆண்டில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பி.யூ.சி. 2-வது ஆண்டில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால், பொது நுழைவு தேர்வில் அவர்கள் பி.யூ.சி.யில் எடுத்த மதிப்பெண்களை சேர்க்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பொது நுழைவு தேர்வு தொடர்பாக உயா்கல்வித்துறை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பு கூறினார். அப்போது தொழில் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட பொது நுழைவு தேர்வு தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலை ரத்து செய்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
21 ஆயிரம் மாணவ, மாணவிகள்
அதே நேரத்தில் பொது நுழைவு தேர்வுக்காக புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவு பிறப்பித்தார். அதாவது கடந்த 2021-ம் ஆண்டு பி.யூ.சி. 2-வது ஆண்டு தேர்வு கொரோனா காரணமாக நடத்தப்படாததால், பி.யூ.சி. முதலாம் ஆண்டு பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதமும், பொது நுழைவு தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 50 சதவீதமும் சேர்த்து புதிய பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இதன்மூலம் 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில் படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை மாணவ, மாணவிகள் வரவேற்று இருக்கிறார்கள்.
உயர்கல்வித்துறை இன்று ஆலோசனை
அதே நேரத்தில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு, உயர்கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் அரசின் உயர்கல்வித்துறை உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்த உள்ளது. உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதாவது பொது நுழைவு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்திருப்பதால், தீர்ப்பை மதித்து புதிய மதிப்பெண் பட்டியல் தயாரித்து வெளியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது.
குறிப்பாக ஒரு நபர் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கி இருப்பதால், இந்த வழக்கை 3 நபர் அடங்கிய டிவிசன் பெஞ்சுக்கு மாற்றும்படி கோரி கர்நாடக ஐகோா்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்வதா? என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அத்துடன் மாணவர்களின் எதிர்கால நலத்தை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உயர்கல்வித்துறை தீர்மானித்துள்ளது.
பசவராஜ் பொம்மையுடன் ஆலோசிக்க...
கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தால், மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்தும் அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகியுடனும் ஆலோசிக்கவும், அவரது கருத்துகளை பெறவும் உயர்கல்வித்துறை தீர்மானித்திருக்கிறது.