கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் கடல் அதிகளவு சீற்றத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மழையால் பொது மக்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் ரவிகுமார், பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளார். அதாவது தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காற்று வீசும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பழைய கட்டிடங்கள், மரங்கள், மின் கம்பங்கள் அருகே பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் பழைய கட்டிடங்கள் இருந்தால், அதன் அருகில் யாரும் செல்லவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.