'5ஜி' சேவையை பயன்படுத்தி மோசடி செய்ய வாய்ப்பு; போலீஸ் கமிஷனர் சசிக்குமார் எச்சரிக்கை


5ஜி சேவையை பயன்படுத்தி மோசடி செய்ய வாய்ப்பு; போலீஸ் கமிஷனர் சசிக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:30 AM IST (Updated: 9 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

5ஜி சேவையை பயன்படுத்தி மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் சசிக்குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.

மங்களூரு;


5ஜி சேவை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது;-

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதை சாதகமாக பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தனியார் சிம்கார்டு சேவை தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5 ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று அறிமுகப்படுத்தி கொண்டு சிம்கார்டை 4ஜியில் இருந்து 5 ஜிக்கு புதுப்பிக்க உள்ளதாக கூறி மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

பின்னர் அவர்கள் ஓ.டி.பி. எண் வந்துள்ளதாகவும், அதனை அனுப்பும் படியும் கேட்பார்கள். மேலும் தாங்கள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்து புதுப்பித்து கொள்ளலாம் என்று கூறியும் மக்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கலாம்.

எனவே, மக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் ஓ.டி.பி. எண்ணை கொடுக்கவோ அல்லது அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம். நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், "சிம் கார்டுகளை 4-ஜியில் இருந்து 5-ஜிக்கு மேம்படுத்த ஓ.டி.பி. தேவையில்லை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை தொடர்புகொண்டு, அந்த நபர் தனது செல்போனுக்கு பல்வேறு முறைகள் மூலம் ஓ.டி.பி. பெறுவதைப் பார்க்க முயற்சி செய்கிறார்கள்.


எச்சரிக்கை தேவை

பின்னர் ஓ.டி.பி.யில் இருந்து தகவல்களை திருடுகிறார்கள். சில நேரங்களில், மோசடி செய்பவர்கள் மேம்படுத்தும் சாக்குப்போக்கில் மக்களின் சிம் கார்டை பயன்படுத்தலாம். இந்த வகையான மோசடி சிம் ஸ்வாப் என்று அழைக்கப்படுகிறது.

5ஜிக்கு மேம்படுத்தும் போது இதுபோன்ற மோசடி நடக்கலாம் என்று எதிர்பார்த்தோம். எனவே, பொதுமக்களை எச்சரித்தோம். இருப்பினும், சமீபத்திய தகவல்களின்படி, இதுபோன்ற மோசடி ஏற்கனவே சில இடங்களில் நடந்துள்ளது. எனவே அதிக எச்சரிக்கை தேவை" என்று கூறினார்.


Next Story