ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மாவட்டந்தோறும் சூறாவளி சுற்றுப்பயணம்; 100 தொகுதிகள் இலக்கு
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மாநிலம் முழுவதும் ஒரு வருட சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
விஜயவாடா,
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மாநிலம் முழுவதும் ஒரு வருட சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தன்னுடைய 73 வயதில், அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தெலுங்கு தேசம் கட்சியின் வர்ல ராமையா கூறுகையில், "சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாவட்டச் சுற்றுப்பயணங்கள் மீண்டும் கட்சியின் புகழை நிலைநாட்ட நிச்சயம் உதவும்" என்று கூறினார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 150 பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா, மனைவி பாரதி மற்றும் சகோதரி ஷர்மிளா ஆகியோர் ஆந்திரா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர்.
இதையடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு இன்னும் 2 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் 100 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்து உள்ளார். அதன்படி ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை பின்பற்றி ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இன்று காலை ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானத்தில் வந்த சந்திரபாபு நாயுடு சோழவரம் வழியாக காரில் வந்து அனக்கா பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொது மக்களை சந்தித்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். அவர் திருப்பதி, சித்தூர் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக ஒரு ஆண்டு சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.
இதே போல் ஜன சேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் 6 மாதத்திற்கு ஆந்திரா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.