தசரா தொடக்க விழாவையடுத்து மைசூரு நகரில் போக்குவரத்தில் மாற்றம் போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா பேட்டி


தசரா தொடக்க விழாவையடுத்து மைசூரு நகரில் போக்குவரத்தில் மாற்றம்  போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாளை (திங்கட்கிழமை) தசரா விழா தொடங்க உள்ள நிலையில் மைசூரு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலக புகழ் பெற்ற ைமசூரு தசரா விழா நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதனால் மைசூரு நகரில் அரண்மனை, பழமையான கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மைசூரு நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மைசூருவில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் கூட்ட நெரிசல் நிலவுகிறது. இதன்காரணமாக மைசூரு நகரில் தசரா

விழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போக்குவரத்துக்கு தடை

மைசூரு தசரா விழாவையொட்டி ஏராளமான மக்கள் மைசூருவில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் தசரா முடியும் வரை மைசூரு நகருக்கு ெவளிப்பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் மக்கள் மைசூருவுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

நகரில் போக்குவரத்து தொந்தரவு இல்லாமல் பொதுமக்கள் அரண்மனை மற்றும் மின்விளக்கு அலங்காரங்களை பார்த்து ரசிக்க நாளை முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை அரண்மனையை சுற்றிலும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பபட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி வருகை, தசரா விழாவையொட்டி மைசூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைசூரு நகரில் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முக்கியமான இடங்கள், நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் உயரமான கோபுரம் அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 'பாடி கேமரா'வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள்.

ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவசர தேவைக்காக 12 தீயணைப்பு வாகனங்களும், 8 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கின்றன. எந்தவித அசம்பாவிதங்களும், பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தசரா விழாவையொட்டி அரண்மனை வளாகத்தில் வருகிற 29-ந்தேதி மற்றும் 1-ம் தேதி போலீஸ் பேண்ட் நிகழ்ச்சி நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story