வருகிற 12-ந் தேதி மண்டியா வழியாக வாகன போக்குவரத்து மாற்றம்


வருகிற 12-ந் தேதி மண்டியா வழியாக வாகன போக்குவரத்து மாற்றம்
x

பிரதமர் வருகையையொட்டி வருகிற 12-ந் தேதி மண்டியா வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

மண்டியா:-

பிரதமர் மோடி வருகை

பெங்களூரு - மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 10 வழிச்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சி மண்டியா மாவட்டம் மத்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் விழா நடைபெறும் தினமான வருகிற 12-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மைசூரு-பெங்களூரு இடையே செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மைசூரு-பெங்களூரு

அதன்படி மைசூரு-பெங்களூரு இடையே இயங்கும் வாகனங்கள் மைசூரு, பண்ணூரு, கிருகாவலு, மலவள்ளி, ஹலகூர், கனகபுரா வழியாக பெங்களூருவை சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் மைசூருவில் இருந்து மண்டியா வழியாக துமகூருவுக்கு செல்லும் வாகனங்கள் ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபுரா, நாகமங்களா, பெல்லூர் கிராஸ் வழியாக துமகூருவுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் வாகனங்கள் சென்னப்பட்டணா, ஹலகூர், மலவள்ளி, கிருகாவலு, பண்ணூர் வழியாக மைசூருவை சென்றடைய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் பெங்களூருவில் இருந்து மத்தூர் வழியாக கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், சென்னப்பட்டணா, ஹலகூர், மலவள்ளி வழியாக கொள்ளேகால், மாதேஸ்வரன் மலைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை

இந்த போக்குவரத்து மாற்றத்தை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், யாராவது இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மண்டியா மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா எச்சரித்துள்ளார்.


Next Story