வீரபத்ரசாமி கோவில் தேர் கவிழ்ந்தது


வீரபத்ரசாமி கோவில் தேர் கவிழ்ந்தது
x

ஆண்டு திருவிழாவையொட்டி ஊர்வலமாக சென்று கொண்டிருந்தபோது வீரபத்ரசாமி கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

கொள்ளேகால்:

வீரபத்ரசாமி கோவில்

சாம்ராஜ்நகர் (மாவட்டம்) தாலுகா அமச்சவாடி கிராமம் அருகே சன்னப்பனபுரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வீரபத்ரசாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் தற்போது ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அங்கு தேரோட்டம் நடந்தது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பெரிய அளவில் ஆண்டு திருவிழா நடத்தப்படவில்லை. மூலவருக்கு பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தேர் கவிழ்ந்தது

நேற்று காலையில் மூலவர் வீரபத்ரசாமிக்கு பூஜைகள் முடிந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதையடுத்து கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். அந்த தேர் அமச்சவாடி-சன்னப்பனபுரா கிராமங்கள் இடையே பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி வந்து கொண்டிருந்தது.

பக்தர்கள் தேரை வேகமாக இழுத்துக் கொண்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேரின் மீது அமைக்கப்பட்டு இருந்த மர கோபுரம் ஒருபுறமாக சாய்ந்தது. இதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி அலறியடித்தபடி ஓடினர். இதையடுத்து தேரின் ஒரு பக்க சக்கரம் கழன்று ஓடியது. அதனால் தேர் நிலைகுலைந்து கவிழ்ந்தது.

பரபரப்பு

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தேர் கவிழ்ந்ததால் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பதற்றமும், வேதனையும் அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தேரின் மீது வைக்கப்பட்டு இருந்த கோபுரம் மூங்கில் மரங்களால் செய்யப்பட்டு இருந்ததால் பாரம் தாங்காமல் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தேர் கவிழும் நிலையில் இருந்ததும் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story