மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் ஏரியில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் ஏரியில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.
பெங்களூரு: பெங்களூருவில், மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது.
ஏரியில் உடல்கள் மீட்பு
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத பெண் உள்பட 2 உடல்கள் மிதந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சன்னகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் 2 உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த சரண் என்பதும், ஹெக்கனஹள்ளியை சேர்ந்த நாகரத்னா என்பது தெரியவந்தது. இதில் நாகரத்னா என்பவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.
கள்ளக்காதல் ஜோடி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரணுக்கும், நாகரத்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் நாகரத்னாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் கள்ளக்காதலை கைவிடுமாறு நாகரத்னாவிடம், அவரது கணவர் கூறினார். ஆனால் அதற்கு நாகரத்னா மறுத்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து தனது கள்ளக்காதலனான சரணிடம் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர். இதுதொடர்பாக ராஜகோபால் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே தாவணகெரேவுக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் பெங்கிகெரே ஏரி பகுதிக்கு சென்று, துப்பட்டாவால் கைகளை ஒன்றாக கட்டிகொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.