முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு தகவல் வெளியானதை அடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
பெங்களூரு:-
திட்ட பணிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரசு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தார். நேற்று முன்தினம் கலபுரகி, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கலபுரகியில் மெகா ஜவுளி பூங்காவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை, நேற்று கொப்பல், ஹாவேரி, தார்வார் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் நேற்று காலை பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதையடுத்து, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தனது மூன்று மாவட்ட சுற்றுப்பயணத்தை நேற்று முனதினம் இரவே ரத்து செய்தார். அங்கு அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
நிகழ்ச்சிகள் ரத்து
உப்பள்ளியில் தங்கியிருந்த பசவராஜ் பொம்மை பெங்களூரு திரும்பினார். அதே போல் நேற்று மந்திரிகள் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முதல்-மந்திரி, மந்திரிகளை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. அடுத்து வரும் நாட்களில் தலைவர்களின் சிலைகள், திட்டங்கள் குறித்த கல்வெட்டுகள் அனைத்தும் திரையிட்டு மறைக்கவும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.