முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம்?

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க வருமாறு பிரதமரிடம் நேரில் அழைப்பு விடுக்கிறார்.
புதுடெல்லி,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஸ் திருவிழாவில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகளைக் கொண்ட பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
பூஞ்சேரியில் போர்பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் 22 சதுர அடி அளவிலான அரங்கத்தை விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்தநிலையில், பிரதமர் மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்க அரசுமுறைப்பயணமாக அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.