அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் நாளை தொடக்கம்; கண்டக்டர் ஆக மாறும் முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் இலவச பயணத்திற்கான திட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா பஸ்சில் கண்டக்டராக இருந்து பெண்களுக்கு ‘சக்தி’ திட்ட டிக்கெட்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
இலவச பயண திட்டம்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து 5 உத்தரவாத திட்டங்கள் அமல்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் சக்தி திட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது.
அதற்கு முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா மெஜஸ்டிக்கில் இருந்து விதானசவுதா வரை செல்லும் 43-ம் வழித்தட பி.எம்.டி.சி. பஸ்சில் 'நடத்துனர்' (கண்டக்டராக) ஆக பணியாற்றுகிறார்.
அப்போது அவர் பெண்களுக்கு இலவச பயணத்திற்கான 'சக்தி' திட்டத்திற்கான டிக்கெட்டுகளை வினியோகம் செய்ய இருக்கிறார். விதான சவுதாவில் இறங்கிய பிறகு அங்கு நடைபெறும் சக்தி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
விலைவாசி உயர்வு
அதே போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண தொடக்க விழாவில் அந்தந்த மாவட்ட மந்திரிகள் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். தாலுகா தலைநகரங்களில் தொகுதி எம்.எல். ஏ.க்கள் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 5 உத்தரவாத திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டம். இந்த திட்டம் 11-ந் தேதி (நாளை) தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
பொருளாதார சுமை
அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது அவர்களின் மீதான பொருளாதார சுமையை சற்று குறைக்க செய்யும். அதனால் இந்த சக்தி திட்ட தொடக்க விழாவை அர்த்தப்பூர்வமாக நடத்த வேண்டும். மந்திரிகள் மாவட்ட அளவிலும், எம்.எல். ஏ.க்கள் தாலுகா அளவிலும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரே மாதத்தில் உத்தரவாத திட்டங்களை அமலுக்கு கொண்டு வருகிறோம். இந்த சக்தி திட்டத்தின் பயன் அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் சாதி, மதங்களுக்கு இடமில்லை. மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரிகளை நியமனம் செய்துள்ளோம். அதனால் மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும்.
மந்திரிகள்
பெங்களூருவில் நடைபெறும் விழாவில் நான் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். அதே போல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் மாவட்டம் மற்றும் தொகுதிகளில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.