மந்திரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா புதிய உத்தரவு
அதிகாரிகளை கண்காணித்து ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மந்திரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
தீர்த்து வையுங்கள்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் 24 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதன் மூலம் மந்திரிசபையில் உள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா மந்திரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அவர் பேசியதாவது:-
கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு பெரும் ஆதரவை வழங்கியதால் நாம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத்துள்ளோம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் பணியாற்ற வேண்டியது அவசியம். மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவற்றை தீர்க்க வேண்டும். தொகுதிகளில் அதிகமாக சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு தீர்த்து வையுங்கள்.
தீவிரமாக போராட்டம்
இதன் மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைவது குறையும். இன்னும ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து கட்சி மேலிடத்திற்கு அதாவது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நாம் பரிசாக வழங்க வேண்டும். இதை மனதில் வைத்து நீங்கள் நேர்மையாகவும், சுறுசுறுப்புடனும் பணியாற்ற வேண்டும்.
நாம் அமல்படுத்தும் உத்தரவாத வாக்குறுதிகளை தகுதியான மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். முன்பு நாம் செய்த
தவறுகள் மீண்டும் நடைபெறக்கூடாது. இலாகா ஒதுக்கீட்டு பணிகள் மிக விரைவில் நிறைவு பெறும். நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா அரசின் ஊழல்களுக்கு எதிராக நாம் தீவிரமாக போராட்டம் நடத்தினோம்.
நாம் மறக்கக்கூடாது
அதனால் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்துள்ளனர். நாம் அரசின் திட்ட பயன்கள் மக்களின் வீட்டு வாசலுக்கே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். நமது பணிகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அமோகமாக வெற்றி பெற வேண்டும். மத்தியில் மோசமான பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட வேண்டும்.
கர்நாடகத்தில் நமக்கு கிடைத்த வெற்றி மூலம் நாம் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். இதை நாம் மறக்கக்கூடாது. உங்களுக்கு பொறுப்பு வழங்கப்படும் மாவட்டங்களில் அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.