சிக்கமகளூரு மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சிக்கமகளூரு மாவட்டத்தில் வாக்குப்பதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் ரமேஷ் கூறினார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டத்தில் வாக்குப்பதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் ரமேஷ் கூறினார்.
வாக்குச்சாவடிகள் தயார்
சிக்கமகளூருவில் நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரமேஷ், பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி (நாளை) நடக்கிறது. இந்தநிலையில் வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதில் தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு 456 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பணம் மற்றும் பரிசு பொருட்கள்
மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் கடந்த 2 நாட்களாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. அங்குள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சிக்கமகளூருவில் அனைத்து பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் தயாராக உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். யானைகள் அட்டகாசம் உள்ள மூடிகெரே பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.