சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடிபோதையில் வந்த டாக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில்  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடிபோதையில் வந்த  டாக்டர்  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வந்த டாக்டர் ஒருவர் குடிபோதையில் இருந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வந்த டாக்டர் ஒருவர் குடிபோதையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சிக்கமகளூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பெண்கள் சிலர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வந்திருந்தனர். அவர்களுக்கு செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்து, டாக்டர் வரும் வரை காத்திருக்கும்படி ஒரு அறையில் ஓய்வு எடுக்க செய்தனர். மேலும் இது குறித்து அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் பாலகிருஷ்ணா என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்ய வருவதாக கூறினார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய காத்திருந்த பெண்கள் கோபமடைந்தனர்.

இதற்கிடையில் வெகுநேரம் கழித்து அந்த டாக்டர் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை அளிக்க சென்ற அவர், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த ஊழியர்கள் அவரை உடனே ஸ்டெச்சரில் படுக்க வைத்து, தனி அறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடனே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் வந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

மேலும் மயக்க மருந்து வழக்கப்பட்ட பெண்களுக்கு (இன்று) அறுவை சிகிச்சை செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சமாதானமாகினர். இந்த சம்பவத்தால் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story