கர்நாடகத்தில் அதிகப்படியாக மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்டம் சிக்கமகளூரு


கர்நாடகத்தில்  அதிகப்படியாக மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்டம்  சிக்கமகளூரு
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:45 PM GMT)

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் அதிகப்படியாக மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்டம் சிக்கமகளூரு மாவட்டம் என்று கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு-

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் அதிகப்படியாக மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்டம் சிக்கமகளூரு மாவட்டம் என்று கலெக்டர் ரமேஷ் கூறினார்.

மதுபாட்டில்கள்

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலையொட்டி சிக்கமகளூருவில் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. அதுமுதல் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நகரசபை கவுன்சிலர்

அதுபோல் இன்று(நேற்று) காலையில் மட்டும் ரூ.29 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த மதுபாட்டில்கள் ஒரு லாரியில் கடத்தி வரப்பட்டபோது சிக்கியது. அந்த லாரியையும் பறிமுதல் செய்துள்ளோம். அந்த மதுபாட்டில்களை யார் கடத்தி வந்தது என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரித்து வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதில் ராஜம்மா, மஞ்சுநாத், மஞ்சுளா லட்சுமண் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் மஞ்சுளா லட்சுமண் நகரசபை கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் சிக்கமகளூரு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க இருந்த பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள், தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதில் கர்நாடக அளவில் அதிகப்படியான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தது சிக்கமகளூரு மாவட்டம் ஆகும்.

60 கிலோ தங்கம்

இதுபோல் இதுவரையில் மாவட்டத்தில் 60 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. திறம்பட செயல்பட்டு இவற்றை பிடித்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். தேர்தல் ஆணையம் சார்பிலும் அவர்களுக்கு உரிய பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கப்படும். ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 500 தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ளன.

வருகிற 13-ந் தேதி சிக்கமகளூரு கடூர் ரோட்டில் உள்ள ஐ.டி.எஸ்.சி. அரசு கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இவ்வாறு கலெக்டர் ரமேஷ் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story