சிறுமி பலாத்கார வழக்கு: குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமி பலாத்கார வழக்கில் குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெங்களூரு:
பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத் நாராயண் ராவ்(வயது 57). இவர் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார். வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை இங்குவிட்டு செல்கின்றனர். பின்னர், மாலையில் வந்து அவர்களை அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அஸ்வத் நாராயண் ராவ், பராமரிப்பு மையத்தில் இருந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் சிறுமியை அஸ்வத் நாராயண் ராவ் பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அஸ்வத் நாராயண் ராவை கைது செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி ரூபா தீர்ப்பு கூறினார். அப்போது பராமரிப்பு மையத்தில் இருந்த 5 வயது சிறுமியை, அஸ்வத் நாராயண் ராவ் பலாத்காரம் செய்தது உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.